சனி, 5 ஜூன், 2010

ஜீவன்களை கொல்ல மாட்டேன்


ஜீவன்களை கொல்ல மாட்டேன்

பாபா உயிருடன் வாழ்ந்து கொண்டு இருந்தபோது அவருக்கு பலரும் பல விதத்தில் பணிவிடை செய்து வந்தனர். அந்த ஊரிலேயே இருந்தவர்கள் தினமும் அங்கு வந்து துவாரகாமாயியை பெருக்கி துடைத்தும், பாபா நடக்கும் லேந்தி பாக் என்ற இடத்தை பெருக்கி சுத்தப்படுத்தி தம்மால் முடிந்த அளவு அனைத்தையும் செய்து வந்தனர். என்னுடைய தந்தையும் எப்போது எல்லாம் அவர் சீரடிக்குச் சென்றாரோ அப்போதெல்லாம் பெட்ரோமாஸ் விளக்கை ஏற்றி பாபா கூறிய இடத்தில் வைத்து விடுவார். அது அவருக்கு தரப்பட்டு இருந்த வேலை.

ஒருமுறை சீரடிக்கு சென்றிருந்த பொது அவர் பாபாவிடம் இனிமேல் தான் பெட்ரோமாஸ் விளக்குகளை ஏற்றப் போவது இல்லை எனவும், அதை ஏற்றியவுடன் இருட்டில் சுற்றித் திரியும் பூச்சிகள் வந்து அதன் மீது மோதி தீயில் விழுந்து மடிந்து விடுவதினால் தனக்கு ஜீவா இம்சை செய்யும் பாவம் பெருகுகின்றது என்று கூறினார். அதற்கு பாபா சிரித்தபடிக் கூறினாராம், ' ஹாய் பஹு , நீ ஒரு முட்டாள். நீ இந்த இடத்தில் விளக்கு ஏற்றாவிட்டால் அவை விளக்கு எரியும் வேறு இடத்துக்குச் சென்று மடியும்.

இந்த உலகில் பிறக்கும் எவருக்குமே பகவான் பிறப்பையும் இறப்பையும் எழுதி வைத்தே அனுப்புகின்றார். அப்படி அவை விளக்கில் மடியவில்லை என்றாலும், வேறு ஏதாவது பூச்சிகள் அவற்றை கொன்றுவிடும். இதுவே நியதி. அதனால் விளக்கை எற்றும் உனக்கு எந்த விதத்திலும் பாவம் சேராது. நீ இப்படி நினைப்பதில் இருந்தே உன் கருணை உள்ளம் தெரிகின்றது . எவருக்கு என்ன விதி என பகவானே தீர்மானித்து அனுப்புகின்றார். பூச்சிகளை படைத்து அவற்றின் வாழ்வை தீர்மானிப்பவர், உன்னை படைத்த போதும் உன்னுடைய வேலையை தீர்மானித்தே அனுப்புகின்றார். அவருடைய செயலை குறை கூறவோ, அதை மீறவோ நமக்கு உரிமை இல்லை. நீ உன் கடமையை செய்து கொண்டு இரு.

அல்லா உனக்கு கருணை புரிவார்' என்றார். இப்படியாக பாபா அனைவருக்கும் புரியும் விதத்தில் மிகவும் தெளிவான பதிலை தருவது வழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக